[Tamil/தமிழ்] உங்கள் வீட்டில் எரிசக்தியையும் பணத்தையும் சேமிப்பதற்கான 5 சிறந்த யோசனைகள்
Publisher
Date
Type
Topic
மின்சாரக் கட்டணங்கள் உயர்ந்து வருவதால், நம்மில் பலர் வீட்டில் குறைந்த எரிசக்தியைப் பயன்படுத்துவதற்கான வழிகளைத் தேடுகிறோம். நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் இப்போதே செய்யக்கூடிய பல எளிய, செலவில்லாத காரியங்கள் உள்ளன. இந்த யோசனைகளில் சிலவற்றை முயற்சிப்பதன் மூலமும், அன்றாடப் பழக்கவழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலமும், நீங்கள் வசதியைத் தியாகம் செய்யாமல் பணத்தைச் சேமிக்கலாம் அத்துடன் சுற்றுச்சூழலுக்கும் உதவலாம்.
-
வெந்நீர்ப் பயன்பாட்டைக் குறைத்தல்
சராசரி வீட்டு எரிசக்திக் கட்டணத்தில் சுமார் 25 விழுக்காட்டுக்கு வெந்நீர்தான் காரணமாகும். இதைக் குறைப்பதற்கான வழிகளில், துணிகளைக் குளிர்ந்த நீரில் துவைப்பது மற்றும் துணிகள் மொத்தமாகச் சேரும்வரை காத்திருப்பது, பாத்திரம் கழுவும் இயந்திரம் (dishwasher) முழுவதுமாக நிரம்பினால் மட்டும் இயக்குவது, குறைந்த நீர் வெளிவரும் நீர்த்தாரைக் குளியல் சாதனத்தைப் (showerhead) பொருத்துவது (அதற்கான செலவை அது விரைவில் ஈடுசெய்துவிடும்) மற்றும் குளியல் நேரத்தைக் குறைப்பது ஆகியவை அடங்கும்.
-
செயல்திறன் மிக்க உபகரணங்களைத் தேர்ந்தெடுத்தல்
உங்கள் எரிசக்திக் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கு வரை வீட்டு உபகரணங்களால் ஏற்படலாம். நீங்கள் ஒரு புதிய குளிர்சாதனப்பெட்டி, உறைவிப்பான் (freezer), தொலைக்காட்சி, சலவை இயந்திரம், துணி உலர்த்தி, பாத்திரம் கழுவும் இயந்திரம் அல்லது குளிரூட்டியை (air-conditioner) வாங்கும்போது, எரிசக்தி மதிப்பீட்டு வில்லையைப் பாருங்கள்—நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அந்தப் பொருள் குறைவான எரிசக்தியையே பயன்படுத்தும். அதிக நட்சத்திர மதிப்பீடு கொண்ட மாடல்களின் விலை சற்று அதிகமாக இருக்கலாம், ஆனால் மலிவான, எரிசக்தி செயல்திறன் குறைந்த ஒரு பொருளைத் தேர்ந்தெடுப்பது காலப்போக்கில் அதிக செலவை ஏற்படுத்தக்கூடும்.
-
சாதனங்களை விவேகமாகப் பயன்படுத்துதல்
நுண்ணலை மின் அடுப்புகள் (microwaves), தொலைக்காட்சிகள் மற்றும் விளையாட்டு முனையங்கள் (gaming consoles) போன்ற சாதனங்களால் பயன்படுத்தப்படும் 'காத்திருப்பு ஆற்றல்' (Standby power), உங்கள் மின்சாரக் கட்டணத்தில் 10 சதவீதத்தைக் கொண்டிருக்கலாம். அதில் ஒரு சிறிய விளக்கோ அல்லது கடிகாரமோ இருந்தால்—அது மின்சாரத்தைப் பயன்படுத்துகிறது. பயன்பாட்டில் இல்லாதபோது சாதனங்களைச் சுவரில் உள்ள மின் இணைப்பை அணைப்பதன் மூலமும், தேவையில்லாத கூடுதல் குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களை (freezer) அகற்றுவதன் மூலமும், துணிகளை மின்உலர்த்தியில் (dryer) உலர்த்துவதற்குப் பதிலாகக் கயிற்றில் காயவைப்பதன் மூலமும் எரிசக்தி இயக்கச் செலவுகளைக் குறைக்கலாம்.
-
செயல்திறனுடன் வெப்பமூட்டுதல் மற்றும் குளிரூட்டுதல்
வெப்பமூட்டுதல் அல்லது குளிரூட்டுதல் ஒவ்வொரு பாகை (டிகிரி) அதிகரிக்கப்படும்போதும், எரிசக்திப் பயன்பாடு சுமார் 5 முதல் 10 விழுக்காடு வரை அதிகரிக்கும். உங்கள் கட்டணங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, குளிர்காலத்தில் உங்கள் வெப்பமாற்றியை (thermostat) 18–20 பாகை (டிகிரி) செல்சியஸிலும், கோடைகாலத்தில் 25–27 பாகை (டிகிரி) செல்சியஸிலும் பொருத்துவதைப் பற்றி யோசியுங்கள். உட்புறக் கதவுகளை மூடுவதன் மூலமும், நீங்கள் பயன்படுத்தும் அறைகளை மட்டும் வெப்பமூட்ட அல்லது குளிர்விக்க வைப்பதன் மூலமும் நீங்கள் பயன்படுத்தும் எரிசக்தியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
-
உங்கள் வீட்டில் காற்றோட்டத் தடுப்பு ஏற்பாடு செய்தல்
காற்றோட்டத் தடுப்பு என்பது, உங்கள் வீட்டை வசதியாக வைத்திருப்பதற்கும், உங்கள் வெப்பமூட்டும் மற்றும் குளிர்விக்கும் செலவுகளில் கால் பகுதி வரை சேமிப்பதற்குமான ஒரு மலிவான மற்றும் எளிதான வழியாகும். கதவுகள், தரைகள், சன்னல்கள் மற்றும் ஓரப்பலகைகளைச் (skirting boards) சுற்றியுள்ள இடைவெளிகளை அடைப்பது, மற்றும் மணல் நிரப்பப்பட்ட அல்லது துணியால் ஆன குழல் வடிவக் காற்றுத் தடுப்பானைப் (draught-stopper) பயன்படுத்துவது போன்றவை 'நீங்களே செய்து கொள்ளக்கூடிய' தெரிவுகளாகும்.
தெரிந்துகொள்ளவும் மேலும் அதிகமாகச் சேமிக்கவும் விரும்புகிறீர்களா?
எரிசக்தி, கழிவு, நீர் மற்றும் பயணச் செயல்திறன் குறித்த ஏராளமான நடைமுறை ஆலோசனைகளும், அரசாங்க உதவி பற்றிய தகவல்களும் ஆங்கிலத்தில் www.energy.gov.au என்ற இணையதளத்தில் கிடைக்கின்றன.